14.8.07

8.8.07

மரணம்

மரணம் - நம் கடைசி உறக்கம்.
இனி எழவே இயலாத கடைசி கண் மூடல்
வாழ்வின் துன்பங்களில் இருந்து நிரந்தர விடுதலை.
யாருமே விரும்பாத முடிவுரை.

ஆம். மரணம் நாம் யாருமே விரும்பாத- ஏற்றுக்கொள்ள விரும்பாத முடிவுரை.

ஏன் மரணம் நம்மால் எற்றுக்கொள்ள படுவது இல்லை?

ஒரு நாவலை படிக்கிறோம். முடிவை அறிந்து கொள்ள துடிக்கிறோம்.

ஒரு சினெமாவை பார்க்கிறோம். முடிவை ரசிக்கிறோம்.

பின், வாழ்வில் மட்டும் ஏன்?

எனக்கு சற்று அதிகமாகவே மரண பயம் இருந்தது. காரணம்.. சிறு வயதில் இருந்தே அருகில் இருந்து பார்த்ததில்லை.... பயந்து விடுவேன் என்று என் அப்பா என்னைப் பார்க்க விட்டதில்லை. ஒரு பிணத்தைக்கூட அருகில் நின்று கண்டதில்லை. அதனால் சிறு வயதில் இருந்தே மரணம் பற்றிய அறிமுகம் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் இப்போதோ எராளமான சாவுகளை நேரில் பார்க்க நேரிடுகிறுது. மரணம் பற்றிய பயம் இப்போதுதான் மெல்ல ஏற்படுகிறது.

கடந்த இரு வருடங்களில் என்னை பாதித்த மரணங்கள் ஏராளம்.

* என் ப்ரிய நண்பனின் தற்கொலை

* மாணவர் விடுதியில் ஒரு மாணவனின் தற்கொலை

* என் நெருங்கிய உறவினர் ஒருவரின் அகால மரணம் (பேருந்து விபத்து)

* கும்பகோணம் தீ விபத்து

* சமீபத்தில் இரு பள்ளி மாணவர்களின் அகால மரணம் (மிதிவண்டி-மகிழுந்து மோதல்)

* என் நண்பனின் தாயார் மரணம்


இதில் என்னை மிகவும் பாதித்தது.... முதல் மரணமும்... கடைசி மரணமும்...

அவ்வளவு தன்னம்பிக்கை உள்ளவன் என் நண்பன். அவனின் தற்கொலை என்னால் ஜீரணிக்க இயலாத ஒன்று.

இன்னொறு நண்பனின் தாயார் மரண சமயத்தில், நண்பனைப் பார்த்தபோது அதிர்ந்து விட்டேன். அவ்வளவு உற்சாகமானவன் ஒடிந்து போய் காணப்பட்டான்.

மரணம் என்று வந்தால் எல்லாம் காணாமல் போய் விடுமா? தன்னம்பிக்கை, உற்சாகம் எல்லாம் எங்கே போனது? எல்லாவற்றையும் புரட்டி போடும் வல்லமை மரணத்திற்கு மாத்திரம் உண்டு என்ற உண்மை அப்போதுதான் புரிந்தது.

ஆனால் இப்போதுதான் வாழ்க்கையை என்னால் ரசிக்க முடிகிறது. என் ஒவ்வொரு நிமிடத்தையும் உற்சாகத்தோடு வாழ்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்களை முடிந்த அளவு மகிழ்ச்சிப்படுத்துகிறேன்.
முடிந்த அளவு மற்றவர்க்கு உதவுகிறேன்.

மரணம் - வாழ்வதற்கான நம்பிக்கையை தந்திருக்கிறது

வாழ்வது ஒரே ஒரு முறை. அதை நல்லபடியாக வாழ்ந்து முடிப்போமே.... சரிதானே நண்பர்களே....