9.7.10

KANYAKUMARI SLANG கன்யாகுமரி வட்டார வழக்கு சொற்கள்



நான் கடந்த இரு நாட்களாக திரு. நீல. பத்மநாபன் எழுதிய "தலைமுறைகள்" என்ற புதினத்தை வாசித்து வருகிறேன். ஒரு வித்தியாச அனுபவமாக இருக்கிறது. அந்த புதினத்தில் என்னை மிகவும் ஈர்த்தது, அதில் பயன் படுத்த பட்டுள்ள கன்னியாகுமரி வட்டார வழக்கு. அதை பற்றி இந்த பதிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். (பிறிதொரு சமயம் கிட்டும்போது இந்த புதினத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன்.)
கன்னியாகுமரி வட்டார வழக்கு மற்ற எல்லா வட்டார வழக்குகளிலும் வித்யாசமானது. காரணம் இதன் மலையாளம் கலந்த பேச்சு வழக்கு. மட்டுமல்லாது தமிழிலும் மலையாளத்திலும் இன்று உபயோகத்தில் இல்லாத வாக்குகளும் இந்த வழக்கில் இருப்பது இதன் சிறப்பம்சம்.

நான் இதை முறையாக தொகுக்கவில்லை. புதினத்தின் ஆரம்ப பக்கத்தில் இருந்து இறுதி பக்கம் வரை உள்ள வார்த்தைகளை அப்படியே கொடுத்து இருக்கிறேன்.

இதில் வரும் வார்த்தைகளுக்கு மற்ற பகுதி தமிழர்களால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. என்னால் முடிந்த அளவிற்கு அதன் அர்த்தங்களை எழுதி இருக்கிறேன். இனி அவ்வட்டார வழக்கு சொற்களும் அதன் அர்த்தங்களும்....
௧) பூச்சை - பூனை
௨) ஓர்மை - ஞாபகம்
௩) பகலம் - பிரச்சினை, சண்டை, பரபரப்பு
௪) கறங்கு - சுற்று
௫) சாடு - குதி
௬) மற்ற நாள் - நாளை மறுநாள்
௭) சவட்டு - அழுத்து, உதை
௮) ஆத்தியமாட்டு - முதலாவதாக
௯) பச்சக்காரன், கூட்டுகாரன் - நண்பன்
௧0) சக்கை - பலாபழம்
௧௧) தெங்கு - தேங்காய், தென்னை
௧௨) எத்தரை - எவ்வளவு
௧௩) மட்டம் (அல்லது) வட்டம் - தடவை
௧௪) சட்டம்பி - நாட்டாமை
௧௫) அப்பம் - அப்போது, அப்படி என்றால்
௧௬) உச்ச - மத்யானம்
௧௭) பழஞ்சி - பழைய கஞ்சி
௧௮) வலிச்சம் காணி - பழித்து காட்டு
௧௯) கொதி - ஆசை
௨0) ஊசியடி - கேலி பண்ணு
௨௧) ஜம்பர் - ரவிக்கை
௨௨) உறங்கு - தூங்கு
௨௩) சானாங்கி - மாட்டு சாணம்
௨௪) கடலாசி - கடிதம்
௨௫) புரியம் - பாசம்
௨௬) ஒனக்கு - உன்னுடைய
௨௭) உரப்பு - நிஜம்
௨௮) தள்ள - அம்மா
௨௯) சத்தியை - விருந்து
௩0) விசர்ப்பு - வியர்வை
௩௧) குஞ்சு குருமால் - குட்டி குழந்தை
(தொடரும்......)

No comments: