4.9.07

என் கேரள பயணம்.....

சமீபத்தில் ஓணம் பண்டிகையை நேரில் காண கேரளா செல்ல முடிவு செய்தேன். ஆனால் விடுப்பு எடுக்க இயலவில்லை. சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் கேரளா செல்ல வாய்ப்பு கிட்டியது.

எனது ஜூனியர் மலையாளி பிரோஸ் பாபுவுடன் வெள்ளி அன்று மாலை புறப்பட்டேன். அப்போது நல்ல மழை. நனைந்தவாறே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.எந்த பேருந்தும் நிற்கவில்லை. பிறகு மீண்டும் வீடு வந்து மிதிவண்டி எடுத்து பேருந்து நிலையம் சென்றேன். பிரோஸ் அங்கே பேருந்தில் காத்திருந்தான். நான் ஏறியவுடன் பேருந்து புறப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து இருந்தால் பேருந்து கிடைத்து இருக்காது.

பேருந்தில் தலை துவட்டிக் கொண்டே அமர்ந்திருந்தேன். படபடப்பு இன்னும் குறையவில்லை.சிறிது நேரத்தில் உறங்கிப்போனேன். திண்டுக்கல் வந்ததும் எழுந்தேன்.மழை இன்னும் குறையவில்லை. பேருந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்தோம். உடன் இன்னொரு மலையாளியும் ஏறினார்.

ரயில் நிலையம் சென்று சீட்டு வாங்கி மூன்றாவது ப்ளாட்பாரம் சென்றோம். எங்கள் பெட்டி தேடி அலைந்தோம். கடைசியில் இடம் கிடைத்து அமர்ந்தோம். பிரோஸ் கடை சென்று தயிர் சாதம் வாங்கி வந்தான். கொட்டும் மழையில் தயிர் சாதம்!!! என்ன செய்வது.... சாப்பிட்டோம். பின்னர் நல்ல உறக்கம்.... காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டை அடைந்தோம்.

கேரளாவிற்கு பல முறை வந்திருந்தாலும் ஓணத்திற்காக வந்தது இதுவே முதல் முறை.கடவுளின் சொந்த பூமியில் இதோ நுழைகிறேன். அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்தில் 'நெல்லாயா' என்ற இடத்தை அடைகிறோம். அங்கே பிரோஸ்ஸின் அனியன்(தம்பி) வண்டியுடன் நிற்கிறான். அங்கே ஒரு சாயா கடையில் சாயா அருந்திவிட்டு வண்டியில் அமர்கிறோம். வண்டி இப்போது 'பட்டிசேரி'யை நோக்கி... பிரோஸ்ஸின் சொந்த ஸ்தலம்.வழி நெடுக அழகிய வயல்வெளிகள்...மேடு பள்ளங்கள்... சிறிய வீடுகள்.... இதை எல்லாம் தாண்டி அவன் மன்சிலை(வீடு) அடைந்தோம்.அழகிய செறிய வீடு. ஒரு திவஸம் முழுவதும் அவன் வீட்டில் தாமசித்து இருந்தேன்.

மூன்னு மணிக்கூரும் வித்யஸ்தமாய கேரள பாசகம். நன்னாயிட்டு சாப்பிட்டேன்.பாலக்காடன் மொழி கேட்டேன். முத்தஸ்ஸியோடு சம்சாரித்தேன்.மலையாளம் வாரிகா வாசித்தேன்.

அது ஒரு அசல் கேரள முஸ்லிம் மாப்பிள்ளா குடும்பம். அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்யாசமாக இருந்தது. அவர்களின் ஆடை, அவர்களின் உணவுகள், அவர்களின் அணுகுமுறை எல்லாமே வித்யாசமாக இருந்தது.

ஆண்கள் என்றால் வெள்ளை நிற நீள முழுக்கை சட்டை, வெள்ளை வேஷ்டி, வெள்ளை தலைப்பாகை என எல்லாமே வெள்ளைதான்.

பெண்கள் என்றால் பல வண்ண கழுத்துப் பட்டை இல்லாத கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, தலையில் முக்காடு. வேறு ஆண்கள் இருந்தால் சமையல் அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

அங்கு பெரியவர்களுக்கு நல்ல மரியாதை.

போன வருடம் இறந்த பெரியவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முழுக்க முழுக்க அரபியில். ஸ்வாரஸ்யமாக இருந்தது.



செறுபுழசேரி சென்று நன்றாக சுற்றினோம். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். சேஷம், அவிடெ ப்ளாஸா தியேட்டர் சென்னு 'ஹலோ' என்ன மலையாள சித்ரம் கண்டோம். மோகன்லால் நடித்தது. படம் சுமார்.



அடுத்த திவஸம், புறப்பட்டு ஸ்ரீஜித்தின் வீட்டினு சென்றோம். 'கோட்டக்கல்' அவன்டெ ஸ்தலம். ஆயுர்வேத நகரம். அங்கு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் இந்தியா முழுவனும் பிரபலம். அங்குள்ள ஆயுர்வேத சாலையில்தான் ஸ்ரீஜித் வேலை செய்துவந்தான். அவன் வீட்டில் மூன்று மணிநேரம் இருந்தேன். அவன் வீடு பாரம்பரிய பழைய வீடு. நல்ல உணவும் கிடைத்தது. சேஷம், வீட்டை ஒட்டி உள்ள பசுமை நிறைந்த இடங்களை சுற்றிப் பார்த்தோம்.

அதன்பின் என் அடுத்த பயணம் திரிச்சூர் நோக்கி.....

அங்கே சீக்கோ ஜோஸ் வீட்டிற்கு சென்றேன். அங்கே இரண்டு மணி நேரம் இருந்தேன். இதுவரை என்னோடு வந்த பிரோஸ் தன் ஊருக்கு புறப்பட்டான். சேஷம், நானும் சீக்கோவும் அரிகில் உள்ள ரெயில் ட்ராக்கிற்கு சென்றோம். ஒரு மணி நேரம் அரட்டை. சேஷம், அவன் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான்.

அங்கிருந்து பாலக்காடு ரயில் நிலையம் சென்று தீவண்டி பிடித்தேன்.வழிநெடுக கேரள நினைவுகளை அசைபோட்டபடி தமிழகம் நோக்கி புறப்பட்டேன்.......