13.3.21

மொழிகளைத் தேடி ஒரு பயணம் - 1

மொழிகளைத் தேடி ஒரு பயணம் - 1

மொழிகளைத் தேடி கற்றுக்கொள்வது என் ஆகப்பெரிய ஆர்வங்களுள் ஒன்று. அது தொடர்பான என் அனுபவ பயணத்தை கட்டுரைகளாக எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். 

அதற்கான சரியான நேரம் இதுவாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

என் முதல் கட்டுரையில் ஹிந்தி கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் தூக்கநாயக்கன் பாளையம் (ஈரோடு மாவட்டம்). அந்த அழகிய ஊரில் பானுமதி ஜீ என்ற ஹிந்தி கற்றுத்தரும் குரு ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு ஹிந்தியில் அடிப்படை அறிவைக் கற்றுக்கொடுத்தவர்.

அப்போது எனக்கு ஹிந்தி கற்க பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லை. அப்பாவின் அன்பு தூண்டுதலினால் ஹிந்தி கற்கச் சென்றேன். பானுமதி ஜீயின் அழகான ஹிந்தி உச்சரிப்பு, அதை சொல்லிக்கொடுத்த விதம் ஆகியவற்றால் எனக்கு அம்மொழி மீது ஆர்வம் பிறந்தது. 

தினந்தோறும் விடியற்காலை 5.30 மணி முதல் 6.30 வரை ஹிந்தி வகுப்புகள் நடக்கும். தூக்கம் கெடுகிறது என்ற கோபத்துடன் அங்கே போனாலும் ஜீயின் அன்பான பேச்சில் மொழியைக் கற்க ஆரம்பித்தேன். 

தமிழை போல அல்லாமல் ஹிந்தியில் நான்கு 'க', நான்கு 'த', நான்கு 'ப', நான்கு 'ட', மூன்று 'ஸ', இன்னும் பல புதிய உச்சரிப்புகளைக் கண்டு அதிர்ந்து போனேன். உச்சரிக்கத் திணறினேன். மேலும் ஏராளமான கூட்டெழுத்துக்கள் வேறு. ஏறக்குறைய 400+ எழுத்துக்கள். ஜீ கொடுத்த தொடர் பயிற்சியால் இரண்டு மாதங்களில் நன்றாக உச்சரிக்க, நன்றாக எழுத பழகினேன். இன்றும் என்னால் ஹிந்தியை சரியாக உச்சரிக்க முடிகிறது, வேகமாக படிக்க முடிகிறது, வேகமாக எழுத முடிகிறது என்றால் அதற்கு பானுமதி ஜீயின் பயிற்சி தான் காரணம்.

ஹிந்தி பிரச்சார சபா மூலமாக பிரார்த்தமிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று மூன்று நிலைகளில் வெற்றிகரமாகக் தேர்ச்சி பெற்றேன். இன்னும் படிக்க ஆர்வம் இருந்த நிலையில் 10ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் வந்ததால் தற்காலிக இடைவெளி விட்டேன். பின்னர் அதுவே நிரந்தர முற்று புள்ளியாக மாறிப்போனது என் துரதிர்ஷ்டம்.

அதற்கு பிறகு ஹிந்தி பாடல்கள், ஹிந்தி படங்கள் ஆகியவற்றின் மூலம் மிக மெதுவாக என் ஹிந்தி கற்றுக்கொள்ளும் பயணம் தொடர்கிறது.

என் பிஹார் மாணவன் வினய் குமார் என்னுடன் ஹிந்தியில் தொடர்ந்து உரையாடியதன் மூலம், பேசும் போது வரும் பயத்தைக் குறைத்து விட்டான். धन्यवाद विनय! (நன்றி வினய்!)

ஹிந்தியில் எனக்குப் பிடித்த சில விஷயங்கள்:
1. ஹிந்தியில் முற்றுப்புள்ளி (.)இல்லை. முற்றுக்கோடு(|) என்பது ஒரு அழகு.
2. வித விதமான கூட்டெழுத்துக்கள்
3. உச்சரிக்கும்போது கிட்டும் அழகான தாள லயம்.
4. எழுதும்போது அனைத்து எழுத்துகளையும் இணைக்கும் மேல் கோடு. 

தற்போது என் குழந்தைகளுக்கு நான் தான் ஹிந்தி டீச்சர்.

நிற்க!

அப்புறம் என்ன காரணத்திற்காக ஹிந்தியை பள்ளியில் கற்றுத்தரும் மத்திய அரசின் முயற்சியை நான் எதிர்க்கிறேன்?

இதற்கான விடையை என் அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன்.....

(தொடரும் -1)